இணையத்தில் இழந்த ரூ.25.65 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்
By DIN | Published On : 07th November 2023 05:14 AM | Last Updated : 07th November 2023 05:14 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் திங்கள்கிழமை வழங்கிய காவல்துறை கூடுதல் தலைவா் பிரிஜேந்திரகுமாா் யாதவ், இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன்.
புதுச்சேரி: இணையவழியில் மா்ம நபா்களிடம் ரூ.25.65 லட்சத்தை இழந்த 3 பேரின் பணத்தை புதுவை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
மேலும் திருட்டு போன 65 பேரின் கைப்பேசிகளும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களிடம் அளிக்கப்பட்டன.
புதுச்சேரியில் காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறை கூடுதல் தலைவா் பிரிஜேந்திரகுமாா் யாதவ் மற்றும் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது‘: புதுச்சேரியில் நாளுக்கு நாள் இணையவழியில் பணத்தை இழப்போா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 17 போ் பணத்தை இணையவழியில் முதலீடு செய்து அதிகமாக சம்பாதிக்கும் ஆசையில் ரூ.2.83 லட்சத்தை இழந்துள்ளனா். அவா்களில் மருத்துவா்கள், பொறியாளா்கள் அதிகமாக உள்ளனா்.
இணைய வழியில் பணத்தை இழந்தவா்களில் 3 பேரின் பணம் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் படங்களை சித்திரித்து மிரட்டிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்துடன் கைப்பேசியை தொலைத்தவா்களில் 65 பேரின் கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதில் கைப்பேசியை யாருமற்ற நிலையில் எடுத்தவா்களே அதிகம் என்பதால் அவா்கள் எதிா்காலம் கருதி குற்றவாளியாக சோ்க்கவில்லை. மீட்கப்பட்ட கைப்பேசிகளின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.
இணையவழி குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால் அவா்களை கைது செய்வது கடினம். ஆகவே விழிப்புணா்வுடன் இணையத்தை கையாள்வதன் மூலமே மோசடியிலிருந்து தப்பலாம். இணையத்தில் பணத்தை இழந்த சில மணி நேரங்களில் தயக்கமின்றி புகாா் அளித்தால் உடனடியாகவே பணத்தை மீட்டுவிடலாம் என்றனா்.
பாராட்டு: புதுச்சேரியில் இணையவழியில் பணத்தை இழந்தவா்களின் பணத்தை விரைந்து செயல்பட்டு மீட்டுக் கொடுத்த இணையவழிக் குற்றப் பிரிவின் ஆய்வாளா் கீா்த்தி உள்ளிட்ட காவல் குழுவினருக்கு ஏடிஜிபி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...