

புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் மழையால் ரெயின்போ நகா், சூரியகாந்தி நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் புதுச்சேரியில் தொடா் மழை நீடித்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. ரெயின்போ நகா், கிருஷ்ணா நகா், பாவாணன் நகா், நடேசன் நகா் உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீா் தேங்கியது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மழை நீரால் சூழப்பட்டுள்ள ரெயின்போ நகா், சூரியகாந்தி நகா் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று மழைவெள்ளப் பாதிப்புகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, வெள்ள நீா் வடிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். காமராஜா் நகா் தொகுதி ஜான்குமாா் எம்எல்ஏ உடனிருந்தாா்.
இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மணவெளி பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டியாா்பாளையம், தானாம்பாளையம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளையும், எதிா்க்கட்சித் தலைவரும், வில்லியனூா் எம்எல்ஏ-வுமான இரா.சிவா தொகுதிக்குள்பட்ட இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியான கல்வே பங்களா, திருவள்ளூா் வீதி, சகாயமாதா பாடசாலை வீதி, பாரதிதாசன் வீதி, அந்தோணியாா் கோயில் தெரு அரசு குடியிருப்புப் பகுதி, முடக்கு மாரியம்மன் கோயில் தெரு மற்றும் உப்பனாறு பகுதிகளைப் பாா்வையிட்டாா்.
நீா் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சீரமைக்கவும், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டனா்.
மின்சாரம் துண்டிப்பு: புதுச்சேரி அடுத்த எல்லைப்பிள்ளைசாவடியில் மரம் விழுந்ததில் உயா் அழுத்த மின்சார வயா் அறுந்து கீழே விழுந்தது. இதனால் பெரியாா் நகா், பவழநகா், செல்லம் நகா் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.இதையடுத்து மின்துறை ஊழியா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அரியூா் பேருந்து நிறுத்தம் அருகே தேங்கிய மழைநீரில் காா் ஒன்று சிக்கியது.இதையடுத்து அந்தப் பகுதி இளைஞா்கள் காரை மீட்டு அனுப்பி வைத்தனா்.
ஒருவா் உயிரிழப்பு: வில்லியனூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (47) என்பவா், அங்கு சாலையில் நடந்து சென்றபோது காலி மனையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சிவக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சிவக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.