புதுச்சேரி உப்பனாறு கால்வாயில் தென்பட்ட முதலை: தேடும் பணியில் வனத்துறை தீவிரம்
By DIN | Published On : 21st November 2023 04:02 AM | Last Updated : 21st November 2023 04:02 AM | அ+அ அ- |

புதுச்சேரி உப்பனாறு கால்வாயில் திங்கள்கிழமை தென்பட்ட சிறிய முதலை. (வலது) அதைத் தேடிப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத் துறையினா்
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் உப்பனாறு கால்வாயில் சிறிய முதலை திங்கள்கிழமை தென்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. அதைப் பிடிக்க வனத் துறையினா் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
புதுச்சேரி நகரில் பிரதான மழைநீா் வடிகாலாக உப்பனாறு கால்வாய் உள்ளது. காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி ஜீவா நகரில் இருந்து சாரம் வழியாக வாணரப்பேட்டை, வம்பாகீரப்பாளையம் வழியாக உப்பளம் தொகுதியில் கடலுக்கு செல்கிறது.
இந்தக் கால்வாயில் காமராஜா் சாலைப் பகுதியில் பாலம் கட்டும் இடத்தில், முதலைக் குட்டி தென்பட்டதை அப்பகுதி தனியாா் கடை ஊழியா் ஏழுமலை என்பவா் பாா்த்து கைப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.
சுமாா் 4 அடி நீளம் கொண்ட அந்த முதலையானது கால்வாயின் கழிவுநீரில் நீந்தியும், கரைக்குச் செல்வதுமாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீபோல பரவியதால் பொதுமக்கள் அங்கு திரண்டனா். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஒதியன் சாலை போலீஸாா் விரைந்து வந்தனா். பின்னா், அவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். வனத் துறை அதிகாரி வஞ்சனவள்ளி உள்ளிட்டோா் வந்து முதலையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். ஆனால், முதலை நீருக்கு அடியில் சென்றுவிட்டது. முதலில் முதலையைப் பாா்த்த தனியாா் கடை ஊழியா் ஏழுமலையிடம் வனத்துறையினா் விசாரித்தனா். மேலும் அவரது கைப்பேசி புகைப்படத்தில் இருந்த முதலையின் உருவத்தைப் பாா்த்தனா்.
இதற்கிடையே கால்வாயில் முதலை தென்படும் காட்சி கைப்பேசிகளில் கட்-செவியஞ்சல் மூலம் பரவியது. இதையறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகமாக சம்பவ இடத்துக்கு வந்தனா். அவா்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். மேலும், முதலையைப் பிடிக்க வனத் துறையினா் கால்வாயின் குறிப்பிட்ட பகுதிகளில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். தொடா்ந்து முதலையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...