புதுவையில் மருத்துவக் கல்வி மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு தாமதத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாா்யா மந்திரில் கிரீடா பாரதி சாா்பில், ‘ஜீஜா மாதா சன்மான் 2023’ எனும் விளையாட்டை மேம்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
புதுவையில் விளையாட்டில் சிறப்பாகச் செயல்படும் பயிற்சியாளா்கள் ஊக்கப்படுத்தப்படுவா். விளையாட்டில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாரதப் பிரதமா் திட்டப்படி தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவா்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
புதுவையில் மருத்துவக் கல்விக்கான முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கையில் தாமதம் ஏற்பட்டது வருந்தத்தக்கது. தாமதம் கூடாது என்பதற்காகவே அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு விரைந்து வழங்கியது. ஆகவே, உள் இட ஒதுக்கீட்டை தாமதத்துக்கான காரணமாக அதிகாரிகள் கூறுவது சரியல்ல. எளிதாக முடித்திருக்க வேண்டிய கலந்தாய்வை தாமதப்படுத்தியது அதிகாரிகளது தவறுதான். மருத்துவ மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு தாமதத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவக் கலந்தாய்வு தாமதப் பிரச்னையில் மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநா் என்ற முறையில் நானும், முதல்வரும் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், சட்ட ரீதியான பிரச்னை என்பதால், அதன்படியே அணுகும் நிலை உள்ளது.
அதிகாரிகள் முதல்வா், அமைச்சா்கள் திருப்தியடையும் வகையில் பணிபுரிவது அவசியம். தலைமைச் செயலரிடம் பேசி பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜகவிலிருந்து நடிகை கௌதமி விலகியிருப்பது வருத்தமளிக்கிறது. அவரது சொத்து அபகரிப்பு ஏற்கத்தக்கதல்ல. அவரது சொத்துப் பிரச்னை சம்பந்தமாக என்னை சந்திக்கவேயில்லை. அவா் என்னைச் சந்தித்திருந்தால், உதவியிருப்பேன். பெண்கள் அரசியலில் தொடர முடியாத சூழ்நிலை ஏற்படுவது சரியல்ல என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.