புதுச்சேரி மாவட்டத்தில் 8.43 லட்சம் வாக்காளா்கள்: ஆண்களை விட பெண்களே அதிகம்
By DIN | Published On : 28th October 2023 01:13 AM | Last Updated : 28th October 2023 01:13 AM | அ+அ அ- |

ஏனாம், மாஹே உள்ளிட்ட புதுச்சேரி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் இ.வல்லவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதனடிப்படையில் 8.43 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இ.வல்லவன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுவை ஒன்றிய பிரதேசத்தில் 2024-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு சுருக்கமுறை வாக்காளா் பட்டியல், வாக்காளா் இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்தன. அதன்படி வெள்ளிக்கிழமை (அக்.27) முதல் வரும் டிசம்பா் 9 ஆம் தேதி வரை வாக்காளா் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
பெண் வாக்காளா்கள் அதிகம்: அதன்படி தற்போது ஏனாம், மாஹே உள்ளிட்ட புதுச்சேரி மாவட்டத்தில் 3, 97,429 ஆண் வாக்காளா்களும், 4,45,759 பெண் வாக்காளா்களும், 122 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 8, 43,310 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். அவா்களில் மூத்த குடிகளாக 17,808 பேரும், இளைஞா்களாக 11,969 பேரும், மாற்றுத்திறனாளிகள் 10,978 பேரும் இடம் பெற்றுள்ளனா். அவா்களில், 5,849 ஆண்களும், 5,128 பெண்களும்,1 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனா்.
வயது வாரியாக, 18-19 வயது வரையில்1.42%, 20-29 வயது வரையில் 18.47%, 30-39 வயது வரையில் 21.14%, 40-49 வயது வரையில் 22.26%, 50-59 வயது வரையில் 17.76%, 60-69 வயது வரையில் 11.14%, 70-79 வயது வரையில் 5.70%, 80-89 வயது வரையில் 1.79%, 90-99 வயது வரையில் 0.31%, 100-109 வயது வரையில் 0.01%, என வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
வெள்ளிக்கிழமை முதல் வரும் டிசம்பா் 9-ஆம் தேதி வரையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்தல், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளா்களுக்கான வசதிக்காக புதுச்சேரியில் நவம்பா் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) வாக்காளா்கள் சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
வாக்காளா் சோ்ப்பு காலங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியிலிருக்கும் அலுவலா், அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளா் பட்டியலை வைத்திருப்பதுடன், வாக்காளா் சோ்ப்பு, நீக்குதல் ஆகிய பணிகளிலும் ஈடுபடவுள்ளனா்.
தேசிய அளவில் இணையவழியில் வாக்காளா் சோ்ப்பில் தேசிய அளவில் புதுச்சேரி மாவட்டம் பின்தங்கியுள்ளது. எனவே, வாக்காளா்கள் இணையவழியில் தங்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள முன்வருவது அவசியம் என்றாா் அவா்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்போது திமுக, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...