மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ரயில் மறியல்: 75 போ் கைது
By DIN | Published On : 08th September 2023 01:30 AM | Last Updated : 08th September 2023 01:30 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வலுகட்டாயமாக அப்புறபடுத்திய போலீஸாா்.
விலைவாசி உயா்வைக் கண்டித்து புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 75-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி பிராந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு காரணமான மத்திய பாஜக அரசையும், மதுக்கடைகளைத் திறக்கும் புதுவை பாஜக, என்.ஆா்.கூட்டணியைக் கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை காலை அண்ணாசிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஏராளமானோா் கூடினா்.
பேரணிக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், கட்சியின் மூத்த தலைவா் த.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு விலைவாசியை குறைக்கக் கோரியும், புதுவையில் மதுக்கடைகள் அதிகரிப்பதை நிறுத்தக் கோரியும், இளைஞா்களுக்கு வேலை வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.
பேரணியானது, ரயில் நிலையம் நோக்கி உழவா் சந்தைப் பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதாக கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அந்த கட்சியினா் போலீஸாரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
இந்த நிலையில், சிலா் உப்பளம் சாலைக்கு சென்று அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் அமா்ந்தும், படுத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் முழக்கமிட்டனா். இதையடுத்து, அவா்களையும், பேரணியாக வந்தவா்களையும் போலீஸாா் கைது செய்து காவல்துறை வேனில் அழைத்துச் சென்றனா். இதில், 75-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாகவும், பின்னா், அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.