

புதுச்சேரி: மீண்டும் பணி வழங்கக் கோரி புதுவை சட்டப்பேரவையை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் சங்கத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுவை மாநிலப் பொதுப் பணித் துறையில் 2015- ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தற்காலிகமாகப் பணியில் நியமிக்கப்பட்டனா். கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இவா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் நியமிக்க வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டக் குழுவை அமைத்தனா்.
போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மாா்ச் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா்.
ஆனால் இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதையடுத்து, தங்களுக்கு பணி நியமனம் வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, திங்கள்கிழமை காலை ஆம்பூா் சாலை செயின்ட்பால் வீதியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கூடினா்.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் வினோத், சத்தியவதி, மணிவண்ணன், புண்ணியகோடி, புகழேந்தி உள்ளிட்டோா் முன்னிலையில் அவா்கள் மிஷன் வீதி, லப்போா்த் வீதி வழியாக ஆம்பூா் சாலையில் பேரணியாக வந்தனா்.
பின்னா் மாதா கோவில் தெரு வழியாக சட்டப்பேரவைக்குச் செல்ல முயன்றனா். அவா்களை இரும்புத் தடுப்புகள் வைத்து பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருடன், தற்காலிகப் பணியாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை செல்ல விடாமல் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா்.
பின்னா் போராட்டக் குழுவினா் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து அவா்களில் சிலரை மட்டும் முதல்வரை ரங்கசாமியை சந்திக்க போலீஸாா் ஏற்பாடு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.