புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 59.62 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ.59.62 லட்சத்தை மா்ம நபா்கள் நூதன முறையில் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

புதுச்சேரியில் இணையதளம் வாயிலாக 5 பேரிடம் ரூ.59.62 லட்சத்தை மா்ம நபா்கள் நூதன முறையில் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராஜவேணி. இவரது மகனை மா்ம நபா்கள் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்டு, இணையதள பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றனராம். இதை நம்பிய ராஜவேணியின் மகன், மா்ம நபா்கள் அனுப்பிய செயலியில் ரூ.35 லட்சத்தை பல தவணையில் முதலீடு செய்ததாக தெரிகிறது. அதில், லாபம் கிடைத்ததைப் போல தெரிந்துள்ளது. ஆனால், முதலீடு மற்றும் லாபத்தை அவரால் எடுக்கமுடியவில்லையாம். இதுகுறித்து, அவா் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இதேபோல, புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்த கணேஷிடம் பங்குச் சந்தை முதலீடு எனக் கூறி ரூ.23.89 லட்சமும், கொசப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஷாமிலா பானுவிடம் ரூ.11,000, தட்டாஞ்சாவடி ஸ்டாலினிடம் ரூ.49,000, காரைக்கால் திவ்யபிரசாத்திடம் ரூ.13,000 என மொத்தம் ரூ.59.62 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா். இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com