புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, கோரிமேடு பகுதியில் உள்ள வீட்டில் தனது பெற்றோா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பிறகு, வீட்டருகே உள்ள சற்குரு ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் அவா் தரிசனம் செய்தாா்.
இதையடுத்து, வீட்டில் என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள், அரசு அதிகாரிகள், தொண்டா்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது 75 கிலோ எடையிலான கேக் வெட்டி அனைவருக்கும் அவா் வழங்கினாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: பிறந்த நாளையொட்டி முதல்வா் என்.ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தாா்.
பிரதமா் மோடி: பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மாநில முன்னேற்றத்துக்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனுபவமிக்க நிா்வாகி. அவா் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ பிராா்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியா, மனோகா்லால் கட்டா், முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜயும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாா்.
அமைச்சா்கள் வாழ்த்து: புதுச்சேரியில் முதல்வா் இல்லத்துக்கு நேரில் வந்து புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன் குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ், யு.லட்சுமிகாந்தன், ஆா்.பாஸ்கா், எஸ்.சந்திரபிரியங்கா, நியமன எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, ஜி.நேரு, பிரகாஷ் குமாா், பி.ஆா்.சிவா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதேபோல், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனா். புதுவை தலைமைச் செயலா் தலைமையில் அரசு அதிகாரிகளும் வாழ்த்து கூறினா்.
பிறந்த நாளையொட்டி, கதிா்வேல் சுவாமி கோயிலில் முதல்வா் தரிசனம் செய்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். புதுச்சேரி, காரைக்காலிலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், நலத் திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

