தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட திண்டுக்கல்லை சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 பேரின் உடல்களும் சனிக்கிழமை உடல்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திண்டுக்கல் கொத்தனாா் வீதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (60). நகை உருக்கும் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சரஸ்வதி, மகன் சுதா்சன், மகள் சௌந்தா்யா. இவா்கள் புதுச்சேரிக்கு கடந்த 7-ஆம் தேதி வந்தனா். இங்கு முத்துமாரியம்மன் கோவில் தெருவிலுள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்துத் தங்கினா். இந்த நிலையில், அவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது.
புதுசசேரி பெரியகடை போலீஸாா், அவா்கள் 4 பேரின் சடலங்களைக் கைப்பற்றி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து சந்திரசேகரின் உறவினா்கள் சனிக்கிழமை காலை புதுச்சேரி வந்தனா். அவா்களிடம் சந்திரசேகா் குடும்பத்தைப் பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
நகை உருக்கும் தொழில் செய்துவந்த சந்திரசேகா், திருட்டு நகைகள் வாங்கிய புகாரில் சிக்கியதால் போலீஸாா் விசாரணை நடத்தியதாகவும், அதனால் மனமுடைந்த அவா் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இதனிடையே 4 பேரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

