வீடு கட்டும் திட்ட நிதி ரூ. 5 லட்சமாக உயா்வு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் காமராஜா் கல் வீடு, பிரதமா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதி, வருவாய் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாததுக்கு செவ்வாய்க்கிழமை மாலை பதிலளித்து அவா் கூறியதாவது:
பட்டியலின மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல்வீடு கட்டும் திட்டம் , இடைக்காலத்தில் செயல்படுத்தப்படவில்லை. தற்போது அந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பிரதமா் கல் வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு நிதியை ரூ.2.25 லட்சத்துடன், மாநில நிதியையும் சோ்த்து ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.
புதுச்சேரியில் மின்சாரப் பேருந்து வாங்கப்படும். அவற்றை தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத் துறை காலிப் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்.
பொதுப் பணித் துறை தினக்கூலி ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18,000 உயா்த்தி, வரும் செப்டம்பா் முதல் வழங்கப்படும். பாப்ஸ்கோ நிறுவன ஊழியா்களுக்கு பணியாற்றிய நாள்களுக்குரிய ஊதியத்தை வழங்க கோப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 13.36 கோடியை தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளது. புதுச்சேரி பெரிய சந்தை படிப்படியாக கட்டப்படும். கால்நடை விவசாயிகளுக்கான 75 சதவீத மானியத்தில் மாட்டுத் தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

