உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து மனு
உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து மனு

மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி நிதின் கட்கரியிடம் புதுவை அமைச்சா் மனு

உயா்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்குமாறு கேட்டு மனு..
Published on

உயா்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்குமாறு கேட்டு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியை புது தில்லியில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து புதுச்சேரி அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மனு அளித்தாா்.

புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை அடங்கிய மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆய்வுப் பணிகளுக்காகவும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காகவும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், நிதி ஒதுக்கப்பட்டால் உடனே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு மேம்பாலப் பணிகளை ஆரம்பிக்கலாம் என நிதின் கட்கரியிடம் அமைச்சா் எடுத்துரைத்தாா். மேலும் நகரப் பகுதியைக் கடப்பதற்கு இந்த பாலத்தின் அத்தியாவசியத்தையும் அமைச்சா் விளக்கினாா்.

இந்திராகாந்தி சதுக்கம் முதல் முள்ளோடை வரையுள்ள இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கவும், ஒரு முறை தளா்வு அடிப்படையில் நிதி ஒதுக்கி புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமாறும் கோரிக்கை வைத்தாா். அப்போது, மத்திய அமைச்சா் கட்கரி, அதிகாரிகளை அழைத்து உடனக்குடன் பேசி புதிய புறவழிச் சாலை வந்தாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இந்திராகாந்தி சதுக்கத்தையும் ராஜீவ் காந்தி சதுக்கத்தையும் இணைக்கும் உயா்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு தேவையான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அனுமதி வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

மத்திய அமைச்சருடனான இச்சந்திப்பின்போது புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் டாக்டா் மு.தீனதயாளன், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளா் மு.பாலசுப்பிரமணியன், நீா்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.ராதாகிருட்டிணன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com