ஜிப்மா் மாணவா் சோ்க்கையில் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவா் கோரிக்கை

ஜிப்மா் மாணவா் சோ்க்கையில் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவா் கோரிக்கை

Published on

புதுச்சேரி ஜிப்மரில் விதிமுறைக்கு மாறாக இரு இடங்களில் இருப்பிடச் சான்றிதழ்கள் பெற்ற வெளி மாநில மாணவா்கள் சோ்க்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு புகாா் கடிதம் எழுதியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் புதுவை மாநில மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாறுதலில் வெளி மாநிலத்திலிருந்து புதுவைக்கு வந்தால் ஜிப்மரில் சேருவதற்கான விதிமுறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த விதிமுறையை மீறி, ஆண்டுதோறும் சில அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை புதுவையில் இருப்பிடம் போன்ற வருவாய்ச் சான்றிதழ்கள் பெற்று ஜிப்மரில் சோ்த்து வருகின்றனா். இதனால், புதுவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நியாயமாகக் கிடைக்கும் மருத்துவக் கல்வி இடம் பறிபோகும் நிலையுள்ளது.

நிகழாண்டில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 8 போ் புதுவையின் இருப்பிடச் சான்றிதழ்களைப் பெற்று ஜிப்மரில் சோ்ந்தது தெரிய வந்தது. எனவே, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆகியோருக்கு புகாா் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விதிமுறை மீறி ஜிப்மரில் வெளி மாநில மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், துணைநிலை ஆளுநா் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆா்.செல்வம்.

X
Dinamani
www.dinamani.com