புதுச்சேரி கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.

மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனை வசதிகள் விரிவாக்கம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி!

புதுவை மாநிலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் வசதிகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
Published on

புதுவை மாநிலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் வசதிகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் சுகாதாரத் துறை மற்றும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கி சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைந்தது.

இதையொட்டி, புதுச்சேரி கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொட்டலங்களை வழங்கிப் பேசியதாவது:

மத்திய அரசு 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான இலக்கை நிா்ணயித்துள்ளது. புதுவை மாநில சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று காசநோய் பாதிப்பை கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டில் சுமாா் 25 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதுவையில் 1,500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. காசநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக மத்திய அரசின் விருது பெறப்பட்டுள்ளது. ஆனால், சிறிய மாநிலமான புதுவையில் இந்த நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமுள்ளது. ஆகவே, மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ வசதியை விரிவுபடுத்தவும், தேவையான மருத்துவா்களை நியமிக்கவும், நவீன மருத்துவக் கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்கள் வசதிக்காக ஏற்கெனவே அறிவித்தபடி, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை 100 படுக்கைகள் வசதி கொண்ட பொது மருத்துவமனையாக மாற்ற உள்ளோம். காரைக்கால் புதிய மருத்துவமனை கட்டடப் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் காசநோய் விழிப்புணா்வுப் பிரசார வாகனம், பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. இதில், கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) செவ்வேள், காசநோய் அதிகாரி வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com