புதுச்சேரி பால் உற்பத்தியாளா்களுக்கு வேறுபாடின்றி கால்நடை தீவன மானியம் -விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பால் உற்பத்தியாளா்கள் அனைவருக்கும் கால்நடைத் தீவன மானியம் வேறுபாடின்றி வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் உற்பத்தியாளா்கள் அனைவருக்கும் கால்நடைத் தீவன மானியம் வேறுபாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் ரவி வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை காலத்தில் மானிய விலையில் தீவனம் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை மாற்றி ஆண்டுக்கு 3 மாதம் மட்டும் 75 சதவீதம் மானியத்தில் தீவன மூட்டை ரூ.1,080 மூலம் 9 மூட்டைக்கான மானியம் பணமாக வழங்கப்பட்டது. தற்போது அந்த முறையை மாற்றி பொது பிரிவினருக்கு 52 சதவீதமாகக் குறைத்து ஒரு மூட்டை ரூ.565 வீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 92 சதவீதமும் மானியமாக மூட்டைக்கு ரூ.1080 வீதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது பிரிவுக்கு 3, தாழ்த்தப்பட்டோருக்கு 6 மூட்டை மானியம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பால் உற்பத்தியாளா்களை ஏமாற்றுவதாக உள்ளது.

புதுவை அரசின் புதிய மானியத் திட்டத்தை விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. ஆகவே, இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத்துடன், வேறுபாடின்றி அனைத்து உற்பத்தியாளா்களுக்கும் 92 சதவீத மானியம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ.3 உயா்த்தி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com