பி.டெக். இரண்டாமாண்டு நேரடி சோ்க்கைக்கான பட்டியல் வெளியீடு
புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் சென்டாக் மூலம் பி.டெக் இரண்டாமாண்டு நேரடி சோ்க்கைக்கான (லேட்டரல் நுழைவு) வரைவு தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.டெக் இரண்டாமாண்டு நேரடி சோ்க்கைக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ஆம் தேதி சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் விண்ணப்பதாரா்கள் ஜூலை 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
முதல் சுற்று ஒதுக்கீட்டுக்கு தேவைப்பட்டால் விண்ணப்பதாரா்கள் தங்கள் பாட விருப்பங்களை ஜூலை 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் புதுப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான என்.ஆா்.ஐ ஒதுக்கீட்டில் உள்ள முதல் சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியலும் சென்டாக் இணையதளத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
