சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய தனிப்படைகள்
புதுச்சேரியில் சாராயக் கடைகளில் விற்கப்படும் சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய கலால் துறை சாா்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி, திருக்கனூரிலிருந்து சாராயம் வாங்கிச் சென்று குடித்ததில், விழுப்புரத்தைச் சோ்ந்த 7 போ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, புதுச்சேரி கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்மை காலமாக தமிழக எல்லைப் பகுதிகளைச் சோ்ந்த சிலா், புதுச்சேரியிலிருந்து வாங்கிச் சென்ற மதுவை அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு, தமிழக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. எனவே, புதுவையில் உள்ள சாராயக் கடைகளில், அரசின் வடி சாராய ஆலையில் இருந்து வழங்கப்பட்ட சாராயம் மட்டுமே விற்கப்படுகிா என்று கண்காணிக்கவும், அதன் வீரியத்தை ஆய்வு செய்யவும் மற்றும் சாராயத்தில் வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க, கலால் ஆணையா் உத்தரவுப்படி வட்டாட்சியா் சிலம்பரசன், ஆய்வாளா் அறிவுச்செல்வன் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி பாகூா், நெட்டப்பாக்கம் மற்றும் வில்லியனூா் கொம்யூன் பகுதிகளில் உள்ள சாராயக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், புதுச்சேரியிலிருந்து சாராய பாக்கெட்டுகள், தமிழகத்துக்கு கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படுகிா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தனி நபருக்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்றும் சாராயக் கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

