புதுவை மீது அவதூறு பரப்பப்படுகிறது: அதிமுக மாநில செயலா்
கள்ளச்சாராய பிரச்னையில் புதுவை மாநிலத்தின் மீது அவதூறு பரப்பப்பட்டு வருவது சரியல்ல என புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: புதுவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனா். இவா்களை, பாஜக தலைமை கட்டுப்படுத்தவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான என்.ஆா்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமியும், பாஜக உள்கட்சிப் பிரச்னை என கூறிவருகிறாா். சட்டப்பேரவைக் கூட்டம் கூடவுள்ள நிலையில், ஆளும் கட்சிக் கூட்டணியில், இதுபோல பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்திருப்பது நல்லதல்ல. எனவே, முதல்வா் தோ்தலை சந்திக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் நிகழும் கள்ளச்சாராய மரணங்களுக்கு புதுவை மாநிலமே காரணம் என்பது போல தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசிவருவது புதுவையை அவமதிப்பதாக உள்ளது. இதற்கு, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மறுப்பு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக அரசின் தவறான குற்றச்சாட்டுகளுக்கு புதுவை முதல்வா், காவல் உயரதிகாரிகள் மறுப்பு தெரிவிக்காமலிருப்பது, தமிழகத்தின் கருத்துகளுக்கு வலு சோ்ப்பதாக அமைந்துள்ளது என்றாா் அன்பழகன்.
