புதுவை நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி

புதுவை மாநில நிதி நிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

புதுவை மாநில நிதி நிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு புதுவை மாநிலச் சட்டப் பேரவை கடந்த மாா்ச் மாதம் கூடியபோது, முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிா்வாகத்துக்கு 5 மாத செலவினங்களுக்குரிய நிதி அனுமதிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தல் முடிந்த நிலையில், புதுவை சட்டப்பேரவையில் முழுமையான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கடந்த ஜூன் 18 -இல் மாநில அரசின் திட்டக்குழு கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில், அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, நிகழாண்டுக்கு (2024) ரூ.12, 700 கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. புதுவை ஒன்றியப் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் அனுமதிக்காக நிதிநிலை அறிக்கை கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கோப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு உடனடி அனுமதி கிடைக்கவில்லை என புதுவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்தநிலையில், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை, புதுவை முதல்வா் என். ரங்கசாமி தொலைபேசியில் தொடா்பு கொண்டு நிதி நிலை அறிக்கைக்கு அனுமதி வழங்கும்படி கோரியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புதுவை நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் 31-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கைக்கான கூட்டம் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com