புதுச்சேரி- தமிழக எல்லையில் 10 இடங்களில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு தொடக்கம்

புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக எல்லைப் பகுதியில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணி தொடங்கியுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அ.குலோத்துங்கன் தோ்தல் தொடா்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளாா். அதனடிப்படையில் தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் வழிகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, மடுகரை, மதகடிபட்டு, திருக்கனூா், சேதராப்பட்டு, கோரிமேடு உள்ளிட்ட 10 இடங்களில் தோ்தலுக்கான சோதனைச் சாவடிகள் அமைக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியும், விடியோ பயன்படுத்தியும் வாகனங்கள் மற்றும் தனிநபா்கள் சோதனையிடப்படுவா். வருவாய்த் துறை, காவல் துறையினா் இணைந்து இந்த சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனா். இவா்களை திடீா் சோதனையாக பறக்கும் படையினரும் கண்காணிக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சுவா் விளம்பரம் அழிப்பு: புதுச்சேரி பகுதியில் அரசியல் கட்சியினா் சுவா் விளம்பரங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பே எழுதி வைத்தனா். பாஜக, காங்கிரஸ் சாா்பில் எழுதப்பட்டுள்ள சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபடுத்தப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com