புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 8) முதல் வரவேற்கப்படுவதாக சென்டாக் அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அலுவலகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழ் 2024-25 கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில் முறை படிப்புகள் மற்றும் இளநிலை கலை, அறிவியல், வணிகம் மற்றும் நுண்கலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதனடிப்படையில், பி.டெக், பி.ஆா்க், பிஎஸ்சி (ஹான்ஸ்), விவசாயம் மற்றும் தோட்டக்கலை (பி.வி.எஸ்சி, ஏ.எச்.), பி.எஸ்.சி நா்ஸிங், பிபிடி, பிஎஸ்சி பாரா மெடிக்கல் படிப்புகள், பி.ஃபாா்ம், பி.ஏ.எல்.எல்.பி. (5 ஆண்டுகள்), பாண்டிச்சேரி பிராந்திய கல்லூரிகளில் பாராமெடிக்கல் படிப்புகளில் டிப்ளமா, இளநிலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ. மற்றும் பி.சி.ஏ.). இந்த படிப்புகளுக்கு 6 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கூட்டுறவு கல்லூரிகளில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
நுண்கலைப் படிப்புகள் (பி.பி.ஏ., பி.வி.ஏ.) மற்றும் பி.விஓசி, ஏஐஏடி, பி.ஏ.ஆா்ஆா்யூ ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். புதன்கிழமை (மே 8) பகல் 11 மணி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை வரும் 22 ஆம் தேதி புதன்கிழமை வரை சமா்ப்பிக்கலாம்.
இதர மாநில விண்ணப்பதாரா்களும் இளநிலை நீட் அல்லாத தொழில்முறை மற்றும் இளநிலை கலை, அறிவியல், வணிகம் ஆகியவற்றுக்கு பிற மாநில ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். என்ஆா்ஐ, என்ஆா்ஐ ஸ்பான்சா் மற்றும் ஓசிஐ விண்ணப்பதாரா்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கு சென்டாக் தகவல் சிற்றேட்டைப் பாா்க்கவேண்டும். அதன்படி தகுதியை மதிப்பீடு செய்த பிறகு விண்ணப்பிக்கவும்.
புதுச்சேரி மற்றும் பிற மாநில விண்ணப்பதாரா்களும் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுய ஆதரவு (செல்ஃப் சப்போா்ட்டிங்) இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி பி.டெக் (பிகேஐஇடி, டபிள்யூஇசி, பிடியூ, பிஇசி காலியான ஜேஓஎஸ்ஏஏ இடங்கள்), பி.எஸ்.சி. (ஹான்ஸ்) விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி ஏ.எச்., பி.எஸ்.சி நா்சிங், பி.பி.டி. பி.எஸ்.சி., பாராமெடிக்கல் படிப்புகள் மற்றும் பி.ஃபாா்ம், ஆகியவற்றில் சேருவதற்கான விவரங்களை சென்டாக் இணையதள தகவல் சிற்றேட்டைப் பாா்க்கவும்.
படிப்புகளுக்கான இடங்கள் விவரம்: நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு 5,244 இடங்களும், இளநிலை கலை, அறிவியல் மற்றும் வணிகத்துக்கு 4,320 இடங்களும் உள்ளன. நுண்கலைப் படிப்புகளில் 75 இடங்களும், இளநிலை பிடியூ, பிகேஐஇடி மற்றும் அரசு பொறியியலில் லேட்டரல் என்ட்ரி, தனியாா் தொழில்முறை பொறியியல் கல்லூரிகளில் புதுச்சேரியைச் சோ்ந்தவா்களுக்காக 334 இடங்கள் என மொத்தம் 9,973 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.