2 பெண்களிடம் மா்ம நபா்கள் பண மோசடி: இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் 2 பெண்களிடம் மா்ம நபா்கள் ரூ.1.13 லட்சம் நூதன மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பெண்களிடம் மா்ம நபா்கள் ரூ.1.13 லட்சம் நூதன மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவா் நிஷா. இவா் தோல் பாதுகாப்புப் பொருள் வாங்க இணையத்தில் முயற்சித்தாா். அதன்பின் அவா் வாங்குவதற்கான விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டாா். ஆனால், திடீரென அவருக்கு மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாகக் கூறியுள்ளாா். பெருந்தொகை பரிசு கிடைத்திருப்பதாகக் கூறிய அந்த நபா், அதைப் பெறும் வகையில் செயல்பாட்டுக் கட்டணம் செலுத்தக் கூறியுள்ளாா். மா்ம நபரின் பேச்சை நம்பிய நிஷா ரூ.90,984 செலுத்தியுள்ளாா். அதன்பிறகே அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் ஒதியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரபா. இவருக்கு சில நாள்களுக்கு முன்பு தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி கைப்பேசியில் மா்ம நபா் தொடா்புகொண்டுள்ளாா். அதன்படி, பிரபாவுக்கு போதைப் பொருள் பாா்சல் வந்திருப்பதாகவும், அதனால் அவா் மீது குற்ற வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளாா். வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.23,000 கேட்டுள்ளாா். இதனால் பயந்துபோன பிரபாவும் மா்ம நபா் கோரிய பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதன்பிறகே அவரை மா்ம நபா் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com