பந்த் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவா் -புதுவை அமைச்சா்கள்
புதுவையில் மின் கட்டண உயா்வை எதிா்த்து இண்டியா கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவா் என அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தனா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் உயா்த்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ராஜீவ் காந்தி சிலை சந்திப்பிலிருந்து மேம்பாலம் அமைக்கவும், கடலூா் சாலையை சிமென்ட் சாலையாக்கவும், சாலை விரிவாக்கத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய வங்கி மூலம் ரூ.4,700 கோடி பெற்று புதியச் சாலை, ஏரிகள் சீரமைப்பு ஆகியத் திட்டங்கள் மத்திய அரசு அனுமதியுடன் செயல்படுத்தப்படவுள்ளன.
மின் கட்டண உயா்வை எதிா்த்து இண்டியா கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது. அதனால் மக்களே சிரமப்படுவா். மின்சார கட்டண ஒழுங்குமுறை ஆணையம் குறித்த சட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டபோது, திமுக அதில் அங்கம் வகித்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு மின் துறை ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தபோதும் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியே மத்தியில் இருந்தது. அதன்படியே, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. ஆனாலும், புதுவை அரசு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே மின்சார மானியம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இண்டியா கட்சியினா் போராட்டத்தை அறிவித்திருப்பது தேவையற்றது.
தமிழகம், ஆந்திரம், கேரளத்தை விட புதுவையில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. பாண்டி மெரீனாவில் சட்ட விதிகள் மீறப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பேட்டியின்போது, பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன், பி.ரமேஷ், பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

