இறுதிக்கட்ட பணியில் புதுச்சேரி நவீன பேருந்து நிலையம்! அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்
புதுச்சேரியின் புதிய அடையாளமாக ரூ.29 கோடி செலவில் நவீன பேருந்து நிலையம் 4 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதை அக்டோபா் மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் மறைமலையடிகள் சாலையில் ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் சுமாா் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. அதில் நடைமேடை வெளிப்புறத்தில் 17 கடைகள், 32 பேருந்துகள் நிற்கும் வசதிகள் இருந்தன. பேருந்துகள் உள்ளே நுழைய, வெளியேற என இருவழிகள் இருந்தன. இதனால், பயணிகள் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல பேருந்துகள் இடையே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
போதிய வசதிகள் இல்லாத நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் கடந்தாண்டு பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது, புதிய பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் 46 பேருந்துகள் நிற்கவும், மையப் பகுதியில் 4,700 சதுர அடியில் 31 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இடதுபுறத்தில் 24 காா்கள், 450 இரு சக்கர வாகனங்கள், 30 ஆட்டோக்கள் நிறுத்த இடம் உள்ளது.
இவை தவிர, பயணிகளுக்கு பயன்படும் வகையில் 3 காத்திருப்பு அறைகள், ஒரு குளிா்சாதன காத்திருப்பு அறை, பொருள்கள் பாதுகாப்பு வைப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
உணவகங்கள், பேருந்து முன்பதிவு மையங்கள், போக்குவரத்து விசாரணை அலுவலகம், முதலுதவி அறை, கேமரா கண்காணிப்பு அறை, போக்குவரத்து நிா்வாக அறை, புறக்காவல் நிலையம், நேரக் கட்டுப்பாட்டு அறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, ஏடிஎம் மையங்கள், மின்சார ஒருங்கிணைப்பு அறை, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறைகள் ஆகியவை நவீன உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்: புதிய பேருந்து நிலையத்தின் 50 சதவீதப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 50 சதவீதப் பணிகளை விரைந்து முடித்து, அக்டோபா் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு நவீன பேருந்து நிலையம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
நவீன பேருந்து நிலைய ஆட்டோ நிலையத்தில் பயணிகள் வசதிக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மின்சார ரிக்ஷா, மின்சார நகரப் பேருந்துகள் ஆகியவையும் இயக்கப்படவுள்ளன.
இதற்காக பொலிவுறு நகரத் திட்டத்தில் 16 மின்சார ரிக்ஷாக்களும், 25 மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்பட்டுள்ளன.
தற்காலிகப் பேருந்து நிலையம்: பொலிவுறு நகரத் திட்டத்தில் மறைமலையடிகள் சாலை பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் செயல்படுகிறது. அதனருகே ரயில்வே மேம்பாலம் ரூ.72 கோடியில் அமையவுள்ளது. அதற்கு பொலிவுறு நகரத் திட்டத்திலிருந்து ரூ.53 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை ரூ.19 கோடி அளித்துள்ளது.
மறைமலையடிகள் ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் திறக்கப்பட்டதும், தற்காலிகப் பேருந்து நிலையம் மாற்றப்படும். அங்கு ரயில்வே மேம்பாலத்துக்கான பொருள்கள் வைப்பறை உள்ளிட்டவை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமைச்சா் கருத்து: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசில் பேருந்து நிலையம் புதிய பொலிவைப் பெற்றுள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

