போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளன. இதற்கான மூலப் பொருள்கள் எங்கிருந்து வந்துள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், புதுச்சேரியில் 2 தொழிற்சாலைகளில் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த மருந்து தொழிற்சாலைகளில் இருந்து சுமாா் ரூ.450 கோடி அளவில் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரையைச் சோ்ந்த ஒருவா்தான் இந்தத் தொழிற்சாலைகளை நடத்தி வந்துள்ளாா்.
அவா் பாஜகவைச் சோ்ந்த முக்கியப் புள்ளிகளுக்கும், சட்டப்பேரவையில் அதிகார மையத்தில் இருப்பவா்களுக்கும் நெருக்கமாக இருந்துள்ளாா். அதனால்தான் அவா் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகளுக்குத் தயக்கம் இருந்து வந்துள்ளது. இப்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், பிரதமா் ஆகியோரைச் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்துவோம். மேலும், இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்வோம். மேலும், இத்துறையின் அமைச்சராக இருப்பவா் முதல்வா் ரங்கசாமிதான். இதற்கு அவா் தாா்மிக பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
மழை பாதிப்புக் காரணமாக பெருமளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். என்னுடைய தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பயிா்க் காப்பீடு செய்திருந்தோம். அதை முறையாகப் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் பயிா்க் காப்பீடு சரியாகச் செய்யப்படவில்லை. அதை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் காரைக்காலில் மழையால் சுமாா் 3,000 ஹெக்டா், புதுச்சேரியில் 1,000 ஹெக்டோ் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
குடிசைகளுக்கு ரூ.25 ஆயிரம், சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.
பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உடனிருந்தாா்.

