ஆஷா பணியாளா்களுக்குச் சம்பள உயா்வு வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம் அதிமுக வலியுறுத்தல்
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்களுக்குச் சம்பளத்தை உயா்த்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து இது குறித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 250-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க துணை நின்றனா்.
இவா்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என 6 மாதத்துக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த உயா்த்தப்பட்ட ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. எனவே,ஆஷா பணியாளா்களுக்கு ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். இதை வழங்கத் தடையாக உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

