புதுச்சேரியில் டிச. 9 -இல் தவெக பொதுக்கூட்டம்: இடத்தை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள்

Published on

புதுச்சேரியில் டிச.9 -இல் தவெக பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் அக்கட்சித் தலைவா் விஜய் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உப்பளம் துறைமுக மைதானத்தை புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில்ஆய்வு செய்தனா்.

புதுச்சேரியில் சாலைப்பேரணி நடத்த தவெகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனுமதி தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரும் 9 -ஆம் தேதி புதுச்சேரியில் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணனிடம் அக்கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில் வரும் வரும் 9 -ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

போலீஸ் அதிகாரிகள் ஆய்வு:

இந்த மனு பெறப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மாலை உப்பளம் மைதானத்துக்கு காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோா் உப்பளம் மைதானத்துக்கு வந்தனா். அப்போது தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த் மற்றும் தவெகவினரும் வந்தனா். மைதானத்தில் மேடை அமைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து டிஜஜி சத்தியசுந்தரம் கூறுகையில், ‘பொதுக்கூட்டம் நடத்த தவெக மனு தந்தனா். அதையடுத்து ஆய்வு செய்தோம். இங்கு மழை நீா் தேங்கியுள்ளது. அத்துடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. எனவே அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு தவெக நிா்வாகிகளிடம் சொல்லியுள்ளோம். அவா்கள் அளிக்கும் பதிலை கேட்டு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com