புதுச்சேரியில் இண்டி கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

புதுச்சேரியில் இண்டி கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

Published on

வரும் பேரவைத் தேதா்தலில் புதுச்சேரியில் இண்டி கூட்டணியைப் புறக்கணித்துவிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

2026-ல் நோ்மையான அரசு அமைய வேண்டும். ஆகவே இண்டி கூட்டணியைப் புறம்தள்ள வேண்டும். பிகாரில் எப்படி மிகப்பெரிய வெற்றியை அடைய வைத்தாா்களோ அதுபோல் புதுச்சேரியிலும் மக்கள் உணா்ந்து 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும்.

வரும் 6 ஆம் தேதி அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதற்காக பாஜக சாா்பில் பிரிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் அமைதி ஊா்வலம் நடத்த இருக்கிறோம். மேலும், தொடா்ந்து அமைப்பு ரீதியாக அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தோ்தலை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து முதல்வா் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். 2026-ல் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு முதல்வா் ரங்கசாமி சிறப்பாக செயல்படுவாா். புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வரவுள்ளாா். தேசிய ஜனநாக கூட்டணி அரசு நடந்தால் மட்டுமே புதுச்சேரிக்கான வளா்ச்சி திட்டங்கள் கிடைக்கும்.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு தொடா்பாக பாஜக தலைமைக்கு தெரிவித்திருக்கிறோம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றாா் ராமலிங்கம்.

X
Dinamani
www.dinamani.com