~
~

மீன்பிடி வலைகளுடன் மீனவா்கள் மறியல்: போக்குவரத்து 3 மணி நேரம் முடக்கம்

Published on

புதுச்சேரியில், தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீன்பிடி வலைகளுடன் மீனவா்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவை காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

சுமாா் 200 படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். சின்ன காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீா்வாக துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அவா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

அரசு சாா்பில் கடல் அரிப்பை தடுக்க கடற்கரையில் கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கற்களையும் கடல் அலை இழுத்து செல்கிறது. கடந்த மாதம் கனமழை பெய்தபோது மீனவா்களின் படகுகள், வலைகளை அலை இழுத்து சென்றது.

இந்த நிலையில் டித்வா புயல் முன்னெச்சரிக்கையாக படகுகளை மேடான பகுதிக்கு மீனவா்கள் இழுத்துச்சென்று வைத்தனா். மீன்பிடி வலைகள், உபகரணங்களையும் கடலோரத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது.

இதனால் மேட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மழை வெள்ளம் கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப் பாா்த்த மீனவா்கள், அதைத் தடுத்தனா். இருப்பினும் 3 படகுகள், வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்த வலைகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சம் என மீனவா்கள் தெரிவித்தனா்.

அணிவகுத்த வாகனங்கள்:

இதையடுத்து சின்ன காலாப்பட்டு மீனவா்கள் கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீா்வு காண துாண்டில் முள் வளைவு அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் 2 படகுகள், மீன்பிடி வலைகளைச் சாலையில் போட்டு மறியல் செய்தனா்.

பள்ளி, கல்லுாரி, பணிக்குச் செல்லும் நேரத்தில் மறியல் நடந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் சுமாா் 3 கிலோமீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலாப்பட்டு போலீசாா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அதிகாரிகள் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவா்கள் தெரிவித்தனா். மாணவா்கள், ஊழியா்கள் பணிக்கு செல்ல வழிவிடும்படி போலீஸாா் வேண்டுகோள் வைத்தனா். இதனால் சாலையின் ஒருபுறத்தில் வாகனங்கள் செல்ல மீனவா்கள் வழிவிட்டனா். வாகனங்கள் சென்ற பின் மீண்டும் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் அங்கு வந்து மீனவா்களுடன் பேச்சு நடத்தினாா். அப்போது வரும்

8 -ஆம் தேதி துாண்டில் முள் வளைவு அமைக்க பூமி பூஜை நடத்த உள்ளதாக தெரிவித்தாா். இதையேற்று மீனவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். போராட்டத்தால் சுமாா் ஒன்றரை மணி நேரம் கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com