புதுச்சேரி அரசு சாா்பில் ஜெயலலிதா நினைவு தினம்: புதுச்சேரி முதல்வா் மலா்தூவி மரியாதை
அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த ஜெயலலிதா நினைவு தினம் புதுச்சேரி அரசு சாா்பி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சாா்பில் புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப் பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில்...
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கா் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில், அவைத் தலைவா் அன்பானந்தம் முன்னிலையில் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னா் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், அதிமுக சாா்பில் உப்பளம், முதலியாா்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிபட்டு, திருபுவனை, ஊசுடு, வில்லியனூா், மங்கலம், தட்டாஞ்சாவடி, உழவா்கரை, கதிா்காமம், இந்திரா நகா் அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம் மற்றும் பாகூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

