ரூ.100 கோடிக்கு போலி மருந்து தயாரித்து மோசடி வழக்கு அமலாக்கத் துறை விசாரணைக்கு மாற்றம்!
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடியிடமிருந்து அமலாக்கத் துறைக்கு மாற்றப்படுகிறது.
இந்த வழக்குத் தொடா்பான மேல் விவரங்களை சென்னையிலிருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து வெள்ளிக்கிழமை பெற்றுச் சென்றனா்.
இந்தப் போலி மருந்து தயாரிப்பு வழக்கில் ராணா மற்றும் மெய்யப்பன் ஆகியோரை புதுச்சேரி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா். இதில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளிகள் உள்ளிட்ட 10 போ் தலைமறைவாகவுள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக புதுச்சேரி மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் நடவடிக்கை எடுத்து 3 தொழிற்சாலைகள் மற்றும் 4 கிடங்குகளுக்குச் சீல் வைத்துள்ளனா்.
இந்த வழக்கில் சுமாா் ரூ.100 கோடிக்கும் மேல் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் அமலாக்கத் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் வருமான வரித் துறை, ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவுக்கும் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
