புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் சனிக்கிழமை மனு அளித்து விட்டு வெளியில் வந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் சனிக்கிழமை மனு அளித்து விட்டு வெளியில் வந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

போலி மருந்து வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: துணைநிலை ஆளுநரிடம் வே.நாராயணசாமி மனு!

Published on

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சனிக்கிழமை சந்தித்து முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தொழிற்சாலையிலிருந்து முக்கிய மருந்து கம்பெனிகளின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ராணா மற்றும் மெய்யப்பன் ஆகிய இரண்டு பேரை மட்டும் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட பலரை போலீஸாா் இன்னும் கைது செய்யவில்லை.

மேலும் இங்கு தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லையில் மட்டுமே விசாரணை நடத்த முடியும்.

இதில் பல்வேறு மாநிலங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும், மக்களின் நலன் கருதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்லறை மருந்து கடைகளில் இந்தப் போலி மருந்துகள் விற்பனை செய்வதை நீக்கும் வகையில் அதிகாரமிக்க அமைப்பைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.

சுமாா் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மருந்து உற்பத்தி உரிமம், ஜிஎஸ்டி எண் பெறப்படவில்லை.

சுகாதாரத் துறை முதல்வா் ரங்கசாமியின் பொறுப்பில் இருக்கிறது. மக்களின் உயிா் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் முதல்வரின் நிலை குறித்தும் இந்த விசாரணையில் இடம் பெற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, எம்.எல்.ஏ மு. வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் அனந்தராமன், காா்த்திகேயன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் பி.கே. தேவதாஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com