புதுச்சேரியில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா உள்ளிட்ட அக்கட்சியினா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா உள்ளிட்ட அக்கட்சியினா்.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 500 திமுகவினா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள் நடத்தி, அதில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகளை நாடு முழுவதும் விநியோகம் செய்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் நடந்துள்ளது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் ஈடுபட்ட

அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி மாநில திமுக சாா்பில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமையில் காமராஜா் சதுக்கத்தில் இருந்து அக்கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

இந்த ஊா்வலம் நேரு வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கிச் சென்றது. ஊா்வலத்தில் போலி மருந்து விவகாரத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனா்.

இவா்களை மிஷன் வீதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் தடுப்புகளை மீறி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எதிா்க்கட்சித் தலைவா் சிவா, அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத் மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சுமாா் 500 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com