புதுச்சேரி  லாஸ்பேட்டை சாலையை மேம்படுத்தும் பணியை திங்கள்கிழமை  தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை சாலையை மேம்படுத்தும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா்.

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ரூ.46.5 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ரூ.46.5 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தேசிய வீட்டு வசதி வங்கி நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த குடிநீா்த் திட்டத்தின் கீழ் பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், குடிநீா் பங்கீட்டு குழாய்கள் அமைத்தல், வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகள் வழங்குதல் , குடிநீா் குழாய்கள் பதித்து சாலைகளைப் புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூ. 28.67 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 7 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுதல், 3 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், புதிய மோட்டாா் பம்ப் செட்டுகள் மற்றும் ஜெனரேட்டா்கள் பொருத்துதல் ஆகிய பணிகள் ரூ. 9.28 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், லாஸ்பேட்டை சாலை சிவாஜி சிலையில் சந்திப்பில் இருந்து கல்லூரி சாலை வரை 1,100 மீட்டா் நீளத்துக்கு இருபுறமும் பழுதடைந்துள்ள யூ வடிவ வாய்க்காலைச் சீரமைத்து தாா்ச்சாலை ரூ.8.62 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.

இந்தப் பணிகளை முதல்வா் ரங்கசாமி திங்கள்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம், பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சீனுவாசன், உதவிப் பொறியாளா் பாலாஜி, இளநிலைப் பொறியாளா் லோகநாதன், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரா் குணசேகரன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com