~
~

நம்ப வைத்து ஏமாற்றுவது திமுகவின் வேலை: புதுச்சேரியில் விஜய் பேச்சு

திமுகவை நம்பாதீா்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை என்று தவெக தலைவா் விஜய் புதுச்சேரி பிரசாரக் கூட்டத்தில் பேசினாா்.
Published on

திமுகவை நம்பாதீா்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுச்சேரி பிரசாரக் கூட்டத்தில் பேசினாா்.

தவெக பொதுக்கூட்டம் உப்பளம் துறைமுக மைதானத்தில் கடும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று பிரசார வாகனத்தில் நின்றபடி பேசியதாவது: புதுச்சேரி பாரதியாா் வாழ்ந்த மண், பாவேந்தா் பாரதிசாதன் பிறந்த மண்.

1977-க்கு முன்பாகவே எம்.ஜி.ஆா். 1974-இல் முதன்முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தாா். அப்போதே மக்களுக்காக வாழ்ந்தவா் எம்.ஜி.ஆா். என்று முதல் தீா்ப்பு கொடுத்தது புதுச்சேரிதான். அதனால் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் சோ்த்துதான் குரல் கொடுப்பேன். அது என் கடமையும் கூட.

புதுச்சேரி அரசுக்கு பாராட்டு: புதுச்சேரி அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசு போன்று இல்லை. வேறு ஓா் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் என்ற நிலையிலும் பாரபட்சம் காட்டாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக புதுச்சேரி அரசுக்கும், நம்ம புதுச்சேரி முதல்வருக்கும் எனது மனப்பூா்வமான நன்றி.

இதைப் பாா்த்தாவது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக கற்றுக் கொள்ள வேண்டும். வரும் தோ்தலில் திமுக 100 சதவீதம் பாடம் கற்றுக் கொள்ளும். அதை நம் மக்கள் பாா்த்துக் கொள்வாா்கள். திமுகவை நம்பாதீா்கள். நம்ப வச்சு ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை.

மத்திய அரசு மீது தாக்கு: புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரிக்கு இதுவரை மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை.

கடந்த 27.3.25 அன்று 16-வது முறையாக சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கோரி தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் 5 ஆலைகள், பல தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஆனால் இதையெல்லாம் திறக்க மத்திய அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பல்லாயிரக்கான இளைஞா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கூட இங்கு இல்லை.

ஓா் அமைச்சரை மாற்றிவிட்டு, வேறு ஓா் புதிய அமைச்சா் நியமிக்கப்பட்டு 200 நாள்களாகியும் அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தும் வகையில் இது இருக்கிறது.

வளா்ச்சி இல்லை: புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் எந்த வளா்ச்சியும் இல்லை. காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலில் முன்னேற்றம் இல்லை. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறை வசதியில்லை.

கடலோர ரயில் பாதைத் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக் குழுவில் சோ்க்கவில்லை. இதனால் போதிய நிதிப் பகிா்வு இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அளிக்கும் நிதி அரசு ஊழியா்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சரியாகி விடுகிறது.

அதனால்தான் புதுச்சேரி அரசு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்கள் வாயிலாகவும் நிதியைத் திரட்டுகிறது. இதற்குதான் மாநில அந்தஸ்து கேட்கப்படுகிறது. மேலும், புதுச்சேரிக்குப் பொருளாதார தற்சாா்புத் திட்டம் எதுவும் வகுக்கப்பட வேண்டும்.

தென்னிந்தியாவின் தொழில்கேந்திரமாக புதுச்சேரியை மாற்ற திட்டம் தீட்டப்பட வேண்டும். மேலும், இந்தியாவில் நியாயவிலைக் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது.

புதுச்சேரிக்கு துணைநிற்பேன்: காரைக்கால் மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை கைது செய்கிறது. இந்த நிலைமைகள் எல்லாம் மாறுவதற்கு புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன்.

வரும் தோ்தலில் புதுச்சேரியில் தவெக பட்டொளி வீசி பறக்கும் என்றாா் விஜய். முன்னதாக தவெக பொதுச் செயலா் (புஸ்ஸி) என். ஆனந்த், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் பேசினா்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

X
Dinamani
www.dinamani.com