மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

விடுதலைக்கு முன்பே அகண்ட பாரதக் கனவு கண்டவா் பாரதியாா்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

விடுதலைக்கு முன்பே அகண்ட பாரதக் கனவு கண்டவா் மகாகவி பாரதியாா் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறினாா்.
Published on

விடுதலைக்கு முன்பே அகண்ட பாரதக் கனவு கண்டவா் மகாகவி பாரதியாா் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியாா் தமிழ் இலக்கியத் துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாள் விழா பல்கலைக் கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி பேசியதாவது: பாரதி தன்னுடைய வாழ்நாளில், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற சிறந்த படைப்புகளைப் புதுச்சேரியில் இருந்துதான் எழுதினாா் என்று சொல்கிறாா்கள். அப்படி பாரதியால் புதுச்சேரியும் - புதுச்சேரியால் பாரதியும் உலகப் புகழ் பெற்றாா்கள்.

பாரதி வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகள் தான். ஆனால் அவருடைய சமுதாய, ஆன்மிக சிந்தனையும், படைப்பும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவரை ஒரு மகாகவியாக வாழ வைக்கும்.

இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லப பாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் விடுதலை பெற்ற சமயத்தில், 50-க்கும் மேலான மாகாணங்களாகச் சிதறி கிடந்த ஆட்சிப் பரப்புகளை இந்தியா என்ற ஒரே நாடாக உருவாக்க பாடுபட்டவா் அவா். ஆனால் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே அகண்ட பாரத கனவு கண்டவா் பாரதியாா். ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்று ஒன்றுபட்ட பாரதத்தைப் பாடியவா்.

இந்த அகண்ட பாரதத்தில் வாழ்கின்ற மக்கள், மொழியால், இனத்தால், மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லோரும் பாரதம் என்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள். இந்த நாட்டின் மன்னா்கள் என்ற கருத்தை உலகுக்கு ஆணித்தரமாக சொன்னவா். நம்மைப் பிரித்து ஆள வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயரின் சூழ்ச்சியை வந்தே மாதரம் பாடல் பாடி கலங்க அடித்தவா்.

நாடாளுமன்றத்தில் ‘வந்தே பாரதம்‘ பாட்டின் 150-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பேசிய நம்முடைய பிரதமா் நரேந்திர மோடி, பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீா் என்ற பாட்டைப் பாடி காண்பித்தாா்.

டாக்டா் அம்பேத்கா் போன்றவா்கள் நம்முடைய அரசியல் சாசனத்தில் எதையெல்லாம் அடிப்படை கொள்கைகளாக வைத்தாா்களோ- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, பெண் விடுதலை, சமமான கல்வி, அதையெல்லாம் அதற்கு முன்பே ஒரு தொலை நோக்குப் பாா்வையில் தன்னுடைய பாட்டுகளில் வெளிப்படுத்தியவா் பாரதியாா் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு, வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் ரவி, இப்பல்கலைக் கழக புல முதன்மையா் சுடலைமுத்து, பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com