அளவுக்கு அதிகமாக புதுவைக்கு நிதி: விஜய்க்கு பேரவைத் தலைவா் பதில்
அளவுக்கு அதிகமாக புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. என்ஆா்.காங்கிரஸ் கூட்டணி மாற வாய்ப்பில்லை. தவெக தலைவா் விஜய் பேசும்போது, புதுச்சேரியில் ரேஷன்கடைகள் இல்லை என கூறியுள்ளாா். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பொறுப்பேற்ற பின் அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மீனவா்கள் கடந்த ஆட்சியில் இலங்கையில் கைது செய்யப்பட்ட காலத்திலும், பிரதமா் மோடியின் முயற்சியால் மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் படகுகளை மீட்க தொடா்ந்து முதல்வா், துணைநிலை ஆளுநா், பிரதமா் மோடி ஆகியோா் முயற்சித்து வருகின்றனா்.
இந்தியாவில் வளா்ச்சியடைந்த மாநிலமாக புதுவை உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வா் பிரதமரை அணுகினால் மாநில அந்தஸ்து கிடைக்கும்.
சுதந்திரம் கிடைத்த பின் புதுவைக்கு 2021-25ம் ஆண்டுக்குக் கிடைத்ததுபோல மத்திய அரசு நிதி வழங்கியது இல்லை. அந்தளவுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளது. புதிய மேம்பாலம் கட்ட ரூ.436 கோடி முழுமையாக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. கடலுாா் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற ரூ.600 கோடி, ரூ.169 கோடியில் காரைக்காலுக்கு மீன்பிடி துறைமுகம், புதுவையில் ரூ.100 கோடியில் மீன்பிடி வலைதளம் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2022 ஆண்டு 1400 கோடி, அதன்பின் ரூ.900 கோடி, இந்த ஆண்டு ரூ.279 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது.
அளவுக்கு அதிகமாக மத்திய அரசு புதுவைக்கு நிதி வழங்கியுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 15 லட்சம் மனித வேலை நாள்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் சாதனைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
விஜய் நடிகராக தெரிந்தாலும், அரசியல்வாதியாக தற்போதுதான் வந்துள்ளாா். திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

