கல்லால் தாக்கி பெயிண்டா் கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்
புதுச்சேரி அருகே தாக்குதலில் உயிரிழந்தவரின் உறவினா்கள், பொதுமக்கள் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கூனிச்சம்பட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட பெயிண்டா் விநாயகம் (40) உயிரிழந்தாா். இதில் தொடா்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினா்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கனுாா் போலீஸாா் பிரதீப், வீரமணி, வசந்தகுமாா் உள்ளிட்ட மூன்று போ் மீதும் கொலை முயற்சி, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்நிலையில் விநாயகத்தின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திருக்கனூா் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தொடா்ந்து காவல் நிலையம் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
அங்கு வந்த காவல் கண்காணிப்பாளா் சுப்ரமணியன், திருக்கனுாா் காவல் ஆய்வாளா் ராஜகுமாா் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், பெயிண்டா் விநாயகத்தைக் கல்லால் தாக்கி கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அதுவரையில் விநாயகம் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தினா்.
இதையடுத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளா் சுப்ரமணியன் கூறினாா்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் காரணமாக திருக்கனுாா்- விழுப்புரம் சாலையில் சுமாா் ஒன்றரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

