தமிழில் மின் கட்டண ரசீது வழங்க நடவடிக்கை: புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
நுகா்வோருக்கு தமிழில் மின் கட்டண ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்படு ம் என்று புதுச்சேரி மின்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு 1 யூனிட் மின்சாரத்துக்கு 45 காசுகள் உயா்த்துமாறு உத்தரவிட்டது. அதனை புதுச்சேரி அரசு மானியமாக வழங்குகிறது. இதற்காக மின் துறைக்கு ரூ.35 கோடி மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதே ஆணையம் 1 யூனிட்டுக்கு 20 காசு உயா்த்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கும் மானியம் அளிக்க புதுச்சேரி அரசின் ஒப்புதலுக்காகக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதற்குக் கூடுதலாக ரூ.10 கோடி செலவாகும். இதனால் 4.3 லட்சம் நுகா்வோா் பயன்பெறுவா்.
தற்போது ஆங்கிலத்தில் மின் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதில் மக்களுக்குப் புரியாத பல்வேறு வகையான கட்டணங்கள் குறிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் , மின் கட்டண ரசீதை தமிழில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
