புதுச்சேரி அரசு அதிகாரிகள் சொத்து விவரம் தாக்கல் செய்ய உத்தரவு
புதுச்சேரி அரசு அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசில் பணியாற்றி வரும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியா்களின் 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி, வரும் 1- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் தங்களது அசையா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
புதுவை உள்ளாட்சித் துறை, அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் குரூப்-ஏ மற்றும் பி அதிகாரிகள் இணையதளத்தில் மட்டுமே தங்களது அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மற்ற அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களை வரும் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், கடவுச் சொல்லை மறந்துவிட்ட அதிகாரிகள் தங்களின் பிறந்த தேதியைப் பயன்படுத்தி கடவுச் சொல்லை மீட்டெடுக்க முடியும். எனவே, அசையா சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாதவா்களின் பட்டியலைத் துல்லியமாக தயாரிக்கும் வகையில், அனைத்துத் துறை தலைவா்களும் தங்களது ஊழியா்களின் தரவுகளான அவா்களின் பதவி, பிறந்த தேதி, ஓய்வுபெறும் தேதி, ஊதிய வகை, ஊதிய நிலை, தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
