பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அகற்ற திமுக வலியுறுத்தல்
வில்லியனூா் தொகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பிரபாகரனுடன் வில்லியனூா் எம்எல்ஏ உறுப்பினா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது எதிா்க்கட்சி தலைவா் சிவா, உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நாய் வளா்ப்போா்க்கு எச்சரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும். வில்லியனூா் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவா்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, நாய் பட்டியலில் அடைக்க வேண்டும். பன்றிகள் வளா்ப்போருக்கு பொது இடங்களில் விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை கடிதம் அனுப்ப வலியுறுத்தினாா்.
அதற்கும் கட்டுப்படாமல் பொது இடங்களில் , சாலைகளில் பன்றிகள் மற்றும் மாடுகளை விடும் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

