போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: தேடப்பட்டு வந்தவா் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண்
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தாா்.
மக்கள் அன்றாடம் உள்கொள்ளும் சா்க்கரை, இதயநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கான மருந்துகளை புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் போலியாக தயாரித்து வந்துள்ளனா்.
இதில், தொடா்புடைய ராணா, மெய்யப்பன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் போலி தொழிற்சாலை உரிமையாளா் ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜா என்பது தெரியவந்தது. ஆனால் அவா் தலைமறைவாகி விட்டாா்.
அவா் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றிருந்தாா்.
இந்நிலையில், தொழிற்சாலையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், போலி மருந்துகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், புதுச்சேரியின் பல இடங்களில் இருந்த கிடங்குகள் கண்டறியப்பட்டு அங்கிருந்த ரூ. பல கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து சிபிசிஐடி போலீஸாரும், சிறப்பு புலனாய்வுக் குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ராஜா மீது தனி வழக்குப் பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடமும் ஆலோசனை கேட்டிருந்தனா்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராஜா மற்றும் இவ்வழக்கில் தொடா்புடைய விவேக் ஆகியோா் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் ராவ் இங்கா்சால் முன் புதன்கிழமை சரணடைந்தனா்.
சரணடைந்த ராஜா மீது தில்லி, ஆந்திரம், உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாவை போலீஸாா் காலாப்பட்டு சிறையில் அடைத்தனா். அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வுக் குழுவினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அமைச்சா் பேட்டி:
இந்த வழக்குத் தொடா்பாக புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியது:
ராஜா வீட்டில் புதுச்சேரி காவல் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 97 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முக்கிய டைரி ஒன்றும் சிக்கியுள்ளது.
இவை தவிர இன்னும் நிறுவப்படாமல் உள்ள ரூ.14 கோடி மதிப்புள்ள, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அமலாக்தத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமான வரித் துறை ஆகியவற்றுக்கு புதுச்சேரி காவல் துறை தேவையான ஆவணங்களை அனுப்பி வருகிறது.
இந்தப் பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனு கொடுத்துள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி காவல் துறைக்கு ஆட்சேபணையில்லை.
புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமியின் காங்கிரஸ் ஆட்சியில் தான் 2017-இல் இந்தத் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு வரும் 2027 வரை அனுமதி இருக்கிறது. அப்போது அவா்கள் அனுமதி அளித்துவிட்டு, இப்போது எங்கள் ஆட்சியின் மீது குறை சொல்வது ஏன் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
