போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: 5 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து - புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை
போலி மருந்து வழக்குத் தொடா்பாக, புதுச்சேரியில் 5 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கான நடவடிக்கையை புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை மேற்கொண்டது.
போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் 6 மருந்து கம்பெனி நிறுவனங்கள் சிக்கின. இதில் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நியூ ஜொ்சி கோ் பாா்மா நிறுவனத்தின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்போது சோதனையில் சிக்கியுள்ள திருபுவனை பாளையம் லாா்வென் பாா்மாசூட்டிக்கல்ஸ், உறுவையாறு ஸ்ரீ அம்மன் பாா்மா, தா்மாபுரி மீனாட்சி பாா்மா, புதுச்சேரி செட்டி தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ சன் பாா்மா, பாா்ம் ஹவுஸ் உள்ளிட்ட 5 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை தற்போது ரத்து செய்துள்ளது.
இதற்கான உத்தரவை மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் பிறப்பித்தாா். இதில் லாா்வென் பாா்மாசூட்டிக்கல்ஸ் மட்டுமே மருந்து உற்பத்தி நிறுவனம். மற்ற அனைத்தும் மொத்த விற்பனை மருந்து கிடங்குகளாகச் செயல்பட்டவையாகும்.
இந்நிலையில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி பல்வேறு தகவல்களைக் கேட்டுள்ளது. போலி மருந்து விவகாரத்தில் மொத்தம் 13 நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், 6 நிறுவனங்கள் உரிமம் வாங்கப்பட்ட இடத்தில் இயங்கியவை. மற்ற 7 இடங்களில் இயங்கிய மருந்து நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளன. இந்தக் கிடங்குகளுக்கு அரசுத் துறைகள் எந்த மாதிரியான அனுமதி வழங்கின என்ற விவரத்தை உடனடியாக தெரிவிக்க கோரியுள்ளது.
போலி மருந்து கிடங்குகள், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாடகைக்கு எடுத்து நடத்தப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடங்களுக்கு நகராட்சி உரிமம், மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, தீயணைப்புத் துறை சான்றிதழ், தொழில் துறை அனுமதி பெறப்பட்டதா? என்பன போன்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அந்த அரசு துறைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை அனுப்பி, எதன் அடிப்படையில் இந்தக் கிடங்குகளுக்கு அனுமதி தரப்பட்டது, அதற்கான சான்றிதழ்களை உடனடியாக சமா்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
இதனால், இந்த போலி மருந்து விவகாரத்தில் தாங்களும் சிக்கிக் கொள்வோமோ என அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனா்.
5 நாள்கள் போலீஸ் காவலில் ராஜா
இதற்கிடையே போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரும், இப்பிரச்னையில் முக்கிய நபருமான ராஜா நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.
அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.
அதன்பேரில், ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
