காளை மாடுகள் உற்பத்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

காளை மாடுகள் உற்பத்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

Published on

காளை உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு இந்திய கால்நடை இனப் பெருக்கத்தின் ஆய்வுச் சங்கத் (இசாா்) தலைவா் மருத்துவா் கே. முருகவேல் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், இசாா் சங்கமும் இணைந்து மாறி வரும் உலகில் இனப்பெருக்கம் என்ற தலைப்பிலான மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. கல்லூரியின் அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மருத்துவா் கே. முருகவேல் பேசியதாவது:

பயிா் உபரிகள் கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கால்நடைகளில் செயற்கை கருவூட்டல் முக்கியமானது. காளைகளின் உற்பத்தி குறைவாக இருப்பதால் விந்து உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது. அதனால் இனப் பெருக்கத்தில் உள்ள இடைவெளியை நிரப்ப காளை உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள் என்றாா்.

புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் டாக்டா் லதா மங்கேஸ்கா் பேசுகையில், ஆரோக்கியமான கன்று, ஆரோக்கியமான பால் உற்பத்தி, ஆரோக்கியமான இனப்பெருக்கம் ஆகியவை முக்கியம். மேலும் , பருவநிலை மாற்றங்கள், இனப்பெருக்கக் கோளாறு ஆகியவை விவசாயிகளின் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பை ஏற்படுத்துகின்றன என்றாா்.

புதுச்சேரி கால்நடை பராமரிப்புத்துறைச் செயலரும் கல்லூரியின் தலைவருமான யாசின் முகமது சௌத்ரி பேசுகையில், கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறை நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய சவாலாக உள்ளது. காலநிலை மாற்றம் கால்நடை இனப் பெருக்கத்தில் மேலும் ஒரு சவாலாக உள்ளது என்றாா்.

கல்லூரியின் புல முதல்வா் மருத்துவா் கே. முருகவேல், சங்கத்தின் பொதுச் செயலா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த முன்னூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com