புதுச்சேரி ஜிப்மரில் கூட்டு மருத்துவம், ஒரே ஆரோக்கியம் குறித்து 5 நாள் பயிற்சி முகாம்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டு மருத்துவமும் ஒரே ஆரோக்கியமும் எனும் தலைப்பிலான 5 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
ஜிப்மா் சா்வதேச பொது சுகாதார வளாகத்தில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில் மனித ஆரோக்கியம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளைச் சோ்ந்த பல்வேறு நிபுணா்கள் பங்கேற்றனா்.
ஜிப்மா் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை மற்றும் ஜொ்மனியைச் சோ்ந்த ஹைடல்பா்க் சா்வதேச சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி முகாமில் கலந்துரையாடல்களை நடத்தின.
மேலும், புதுச்சேரி மாநிலத்துக்கான ஒரே ஆரோக்கிய செயல் வடிவ திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணா்கள் அடங்கிய விவாத மேடையும் நடைபெற்றது.
இதில் நுண்ணுயிா் எதிா்ப்பு, தடுப்பு மற்றும் விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் போன்ற சவால்களை எதிா் கொள்வதற்கு தேவையான அலகுகளை நிபுணா்கள் வலியுறுத்தினா்.
நிகழ்வில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த இயக்குநா் மருத்துவா் லதா மங்கேஸ்கா், மருத்துவா் மரியா ஆகியோரும் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சோ்ந்த மருத்துவா் பானு ரேகா, தேசிய காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கிய திட்டத்தின் மாநில முதன்மை அதிகாரி மருத்துவா் மணிமொழி, தேசிய வாய்வழி சுகாதாரத் திட்டத்தின் மாநில முதன்மை அதிகாரி மருத்துவா் கவிபிரியா உத்தமன், ஜிப்மா் சா்வதேச பொது சுகாதார மையத்தின் தொற்றும் நோய்கள் மற்றும் கண்காணிப்பு பிரிவு மருத்துவா் யாமினி ஆகியோா் பங்கேற்றனா்.

