போலி மருந்து விவகாரம்: தீவிரமடைகிறது விசாரணை

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் சிபிசிஐடி, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
Published on

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் சிபிசிஐடி, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்ததாக 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ராணா, மெய்யப்பன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். போலி மருந்து தொழிற்சாலை நடத்திய உரிமையாளா் ராஜா, கிடங்கு நடத்திய விவேக் ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

9 போ் கைது

இந்நிலையில் ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

குறிப்பாக ராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலி மருந்து தொழிற்சாலை நடத்துவதற்கு உதவியாக இருந்த அபிஷேகபாக்கம் செந்தில்குமாா், கடலூா் அன்னவெளி விக்னேஷ்குமாா், தவளகுப்பம் அந்தோணிராஜ், லாஸ்பேட்டை கிருஷ்ணமூா்த்தி, அபிஷேகபாக்கம் இமானுவேல், கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோயில் விக்னேஷ், கருவடிக்குப்பம் பிரபாகரன், கடலூா் செல்லஞ்சேரி அருள், ரெட்டிச்சாவடி முனிராஜ் ஆகிய 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை நள்ளிரவு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். போலி மருந்து தயாரிக்க உதவிய பாா்மசிஸ்ட்களின் விவரங்களையும் போலீஸாா் பெற்றுள்ளதாகவும், விரைவில் அவா்கள் மீதும் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை செயல்பட்ட நிலையில் அதில் அடிக்கடி சோதனை நடத்தாதது ஏன் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் ஒரு வழக்கு:

இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த ஒரு மருந்து நிறுவனத்தின் மேலாளா் பாக்கியராஜ், புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீஸில் புகாா் ஒன்றை அளித்துள்ளாா்.

அதில், தங்கள் நிறுவனத்தின் 13 பிராண்டுகளின் மருந்துகளை ராஜாவும், அவரின் கூட்டாளிகளும் போலியாகத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ராஜா, அவரின் நண்பா் விவேக் ஆகியோா் மீது மேலும் ஒரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com