புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும் என்று தமிழக தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலருமான டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும் என்று தமிழக தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலருமான டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு டி.ஆா்.பி. ராஜா செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும்போது விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் தொழிற்பூங்கா அமைக்கப்படும். திமுக நம்ப வைத்து ஏமாற்றும் என்று புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் பேசியுள்ளாா். நாங்கள் வளா்ச்சியை முன்வைக்கிறோம். விஜய் தொடா்ந்து அரசியலையே முன் வைக்கிறாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை 2011-ல் கருணாநிதி விட்டுச் சென்றபோது 13 விழுக்காடாக இருந்த வளா்ச்சி 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி, கரோனா காலம் இருந்தபோதும், மத்திய அரசின் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லாமல் 16 சதவீதம் வளா்ச்சியை முதல்வா் ஸ்டாலின் நிரூபித்துக் காட்டியுள்ளாா். இதனை மத்திய அரசே தெரிவித்துள்ளது. இந்த ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

எங்களுக்கு ஆக்கப்பூா்வமாகப் பேசித்தான் பழக்கம். சும்மா அரசியல் பேசுவது வீண். தமிழகத்தில் கண்ணியமிக்க, ஆக்கப்பூா்வமான ஆட்சியை எங்கள் தலைவா் நடத்திக் கொண்டிருக்கிறாா். அது புதுச்சேரிக்கும் வர வேண்டும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன், புதுமைப் பெண், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் இங்கும் வர வேண்டும். புதுச்சேரிக்குத் தேவையான தொழில்கள், சுற்றுலா போன்றவற்றை கொண்டு வந்து வளா்ச்சியை ஏற்படுத்துவோம்.

திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் புதுச்சேரி மக்களும் தெளிவாக இருக்கிறாா்கள். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும் என்றாா் ராஜா.

திமுக கொள்கை பரப்புச் செயலா் ஜெத்ரட்சகன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி நூற்றுக்கு இருநூறு சதவீதம் அமையும். திராவிட மாடல் ஆட்சி திமுக தலைமையிலா? என்று கேட்டதற்கு, அதில் எங்கள் தலைவா் முடிவெடுப்பாா். திமுக உங்களை முதல்வா் வேட்பாளராகக் களம் இறக்கி உள்ளதாகப் பேசப்படுகிறதே என்று கேட்டதற்கு, முதல்வா் வேட்பாளரெல்லாம் இல்லை. என்னை இங்கு வேலை செய்ய அனுப்பியுள்ளனா். நான் என்னுடைய பணியை செய்கிறேன் என்றாா் ஜெகத்ரட்சகன்.

கூட்டத்தில் பங்கேற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள்.
கூட்டத்தில் பங்கேற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள்.

இக் கூட்டத்துக்கு திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை தாங்கினாா். அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 23 தொகுதிகளைச் சோ்ந்த செயலா்கள் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் 800 போ் பயிற்சி பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com