புதுச்சேரி அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் உண்ணாவிரதம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்வித் துறையில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் கௌரவ பால சேவிக்காக்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுவை சுதேசி ஆலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பாரி தலைமை தாங்கினாா். அதன் கூட்டமைப்பு கௌரவத் தலைவா் சேஷாசலம், புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் தலைவா் பாலக்குமாா், தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் சிரில் நிக்கோலஸ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் ச. பொற்செழியன், புதுச்சேரி அரசு விரிவுரையாளா் சங்கத்தின் தலைவா் அ. அருள்சாமி, புதுச்சேரி பட்டதாரி ஆசிரியா் சங்கங்களின் தலைவா் ராமதாஸ், புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி நலச் சங்கத்தின் தலைவா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் போராட்டம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினா்.
இதில் கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள், கௌரவ பால சேவிக்காக்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளா்கள் என 200 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

