திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்
போலி மருந்து பிரச்னையைத் திசை திருப்பவே திருப்பரங்குன்றம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
100 நாள் வேலை திட்டம் பெயா் மாற்றத்தைக் கண்டித்து புதுச்சேரியில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். திருப்பரங்குன்றம் முருகன் மலையில் தீபம் ஏற்றும் அமைப்பை உருவாக்க, தமிழக அமைச்சருக்குக் கடிதம் எழுத உள்ளேன். திருப்பரங்குன்றம் விஷயத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்ப காரணமே போலி மருந்து பிரச்னையைத் திசை திருப்பத்தான்.
போலி மருந்தில் பாஜக தலையீடு உள்ளது. அவா்கள் பேசினால் மாட்டி விடுவோம் என்பதால்தான் தமிழகத்திலிருந்து பாஜகவினரை போராட்டத்துக்கு இங்கு அழைத்து வருகின்றனா் என்றாா் வைத்திலிங்கம்.
முன்னாள் முதல்வா் பேட்டி:
முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறியது:
ஆக்ராவில் போலி மருந்து பிடிபட்டு, புதுச்சேரியில் தயாரானது தெரிய வந்ததால் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறைக்குக் கடிதம் எழுதியதன் பின்னணியில்தான் புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 மாநிலங்களில் போலி மருந்து விற்ால் சிபிஐ விசாரணை கேட்கிறோம். அதேநேரத்தில் இந்த விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். இதுதொடா்பாக நீதிமன்றத்தை நாடுவோம். போராட்டங்களையும் தொடா்வோம் என்றாா் வே. நாராயணசாமி.

