திருப்பி அனுப்பப்பட்ட பழுதான வாக்குப் பதிவு இயந்திரங்கள் : புதுச்சேரி தோ்தல் துறை நடவடிக்கை

பழுதான வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுச்சேரி மாவட்ட தோ்தல் துறை திருப்பி அனுப்பியது.
Published on

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்ப்பு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 2,844 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,558 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,766 வாக்காளா் சரிபாா்ப்பு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதில் 179 கட்டுப்பாட்டுக் கருவிகள், 258 சரிபாா்ப்பு இயந்திரங்கள் பழுதாகியிருப்பது கண்டறியப்பட்டது. இவை உற்பத்தியாளா் நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படைத் தன்மையுடன் பரிசோதிக்கப்பட்டன.

சரியான இயந்திரங்கள் அனைத்தும் மூடி முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இவை வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வரும் தோ்தலை சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com